December 31, 2009
December 21, 2009
கீத கோவிந்தம் - ஜெய தேவர்
ஜெய தேவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரம பக்தர்.
ஜெய தேவர் கீத கோவிந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ராதை ஊஞ்சலில் ஆடி கொண்டிருக்கிறாள். கண்ணன் எதிரே வருவதை அவள் கவனிக்கவில்லை. ஊஞ்சலில் தன்னை மறந்த நிலையில் கால்களை நீட்டி அமர்ந்து வீசி ஆடுகையில் எதிரே வந்த கிருஷ்ணரின் சிரசின் மீது அவள் பாதங்கள் படுகின்றன. அந்த ஸ்பரிஸத்தால் பகவான் பூரித்து போகிறார்.
இந்த கருத்துபட 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்ற வரிகளை எழுதுகிறார். எழுதிய வரிகளை படித்து பார்க்கும்பொழுது " எத்தனை பெரிய தவறு.. ராதையின் பாதங்கள் பகவான் சிரஸில் படுவதாக எழுதியது. எத்தனை அறிவீனம்" என்று எண்ணி ஏடுகளை கிழித்துவிட்டு ஸ்னானம் செய்ய செல்கிறார்.
அவர் வெளியே சென்றதும் பகவான் கிருஷ்ணரே ஜெயதேவர் வடிவில் வந்து புதிய ஏட்டை எடுத்து 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்று அதே வரிகளை எழுதிவிட்டு செல்கிறார். பிரேமையின் வடிவமான ராதையின் பாதங்களின் பெருமை கண்ணனுக்கல்லவா தெரியும்.
வீட்டிற்கு வந்த ஜெயதேவர் ஏட்டை பார்த்து அதிசயிக்கிறார். பகவான் கிருஷ்ணனே வந்து கீத கோவிந்த வரிகளை எழுதிவிட்டு சென்றதை அறிந்து அந்த கருணைக்கடலை மேலும் பல வரிகளால் பாடி மகிழ்கிறார்.
எல்லையே இல்லாத தூய பக்திக்கு எத்தனை மதிப்பு தருகிறான் இறைவன். தன்னை தாழ்த்திக்கொன்டு தன் அடியவர்களின் பெருமையை உயர்த்தும் அவன் பெருமையை என்னென்பது. - (டி.எஸ். நாராயண ஸ்வாமி உரையிலிருந்து)
December 17, 2009
சாரதியின் திருவழகு
திரு வரதனுக்கு - குடை அழகு
திரு அழகருக்கு(கள்ளழகர்) - படை அழகு
திரு மன்னருக்கு(வில்லிபுத்தூர்) - தொடை(மாலை) அழகு
திரு அமுதனுக்கு (திருக்குடந்தை) - கிடை (பள்ளி) அழகு
திரு நாராயணர்க்கு (திரு நாராயணபுரம்) - முடி (வைர முடி) அழகு
திரு மலையில் - வடிவு அழகு
திரு சாரதிக்கு (திருவல்லிகேணி) - உடை அழகு
December 13, 2009
அனுமான் ஜெயந்தி
சிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
ஆஞ்சநேயருக்கு வாயு புத்திரன், மகா பவிஷ்டன், அர்ஜுனசகன் என்று பல பெயர்கள் உண்டு.
அனுமான் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபடவேண்டும்.
November 23, 2009
பகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்
கைம்மா றென்றும் செய்யாதார்க்கும்
காலத்தால் செயும் தானமெல்லாம்
தக்க இடத்தில் தக்கார்க்(கு) ஈந்தால்
ஸாத்விக தானம் எனப்படுமே.
கைம்மா(று) ஒன்றே கருத்திற் கொன்டு
பலனை நாடிய தானமெல்லாம்
தூய மனத்தால் செய்யாமையினால்
ராஜஸ தானம் எனப்படுமே.
தக்கார்க்(கு) அல்லால் ஈயும் தானம்
தகாத இடத்தில், காலத்தால்
பணிவே இன்றி இழிவாய்ச் செய்யின்
அதுவே தாமஸ தானமுமாம்.
-அத்(17),ஸ்லோகம்(20-22)
November 22, 2009
ராதா, கிருஷ்ணா காயத்ரி
November 21, 2009
கிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்?
நீங்கள் உங்களுக்கு பிரியமானவரை கட்டுப்படுத்துவதுபோல..உங்களுக்கு பிரியமான குழந்தை நெருப்பை தொடப்போனால் "டேய் கண்ணா.. அதை தொடாதே." என்று தடுப்பீர்கள்.
அது போல கிருஷ்ண உணர்விலிருந்து பக்தன் எப்போதுமே தவறான வழியில் செல்லவிடப்படமாட்டான்.. ஏனென்றால் கிருஷ்ணர் எப்போதும் அவனை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். (From the book "Perfect questions and Perfect answers")
கண்ணனின் கீதை
"பலனுக்கு ஆசைப்பட்டு செயல்படாதே. விளைவுக்கு பயந்து செயல்படாமலும் இருந்து விடாதே. எது நீ செய்ய வேண்டிய கடமையோ அதனை சிந்தையில் குழப்பமின்றி செய்.
உன்னைச் சேர வேண்டிய பலன் உன்னை வந்து சேரும். அப்படி பலன் கிடைத்தபோதிலும் அதனால் நீ பாதிப்புக்குள்ளாகிவிடாதே. ஏனெனில் உன்னை ஒரு கருவியாக வைத்து யாமே செய்கிறோம்.
எவன் ஒருவன் தன்னை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துக்கொன்டு செய்ய வேண்டிய கடமையை சஞ்சலமின்றி செய்கிறானோ அவன் பாவ புன்னிய தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
அந்த ஸ்திதப்ரக்ஞன்(நிலை மனதினன்) புனரபி ஜனனம், புனரபி மரணம்(மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு) என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு என்னை அடைகிறான்".
கடவுளை அடைவது எப்படி.?
கோபியர்கள்டைய கோதில்லாத மனதை முற்றிலும் கொள்ளை கொன்டுபொய்விட்ட கோமளன் கண்ணன். அன்புக்கடவுள் என்று அவர்கள் கண்ணனை வணங்கினார்கள். கண்ணனை தவிர வேறு கடவுளை அவர்கள் கனவிலும் கருதியது கிடையாது. தங்கள் உயிருக்கு உயிராய் தங்கள் உள்ளத்தில் ஊற்று எடுத்து வரும் அன்புக்கு இலக்காய் கோபியர் கண்ணனை கருதி வந்தனர்.
கடவுளை அடைய தகுதியுள்ளவர் யார் என்ற கேள்விக்கு முனிவர்களுக்கு கிடைத்த முடிவு ஒன்றேதான். பிருந்தாவனத்தில் வசித்து வந்த கோபியர்களுடைய களங்கமற்ற உள்ளமும் தூய அன்பும் யாருக்கு வந்து வாய்க்குமோ அந்த பாக்கியவான் பகவானை எளிதில் பெற்று தனக்கு சொந்தமாக்கி கொள்வான் என்பதே அவர்கள் முடிவு.
November 20, 2009
ராம நாமத்தின் வரலாறு
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். விஷ்ணு ஆலயத்தில் தீர்த்தமும் சிவாலயத்தில் விபூதியும் கொடுக்கப்படுகிறது.
எனெனில் சிவபெருமானுக்கு முதல் பக்தர் மகாவிஷ்ணுதான். மகாவிஷ்ணுவுக்கு முதல் பக்தர் சிவபெருமான். இருவருமே தமக்கு பிரியமான பொருளைவிட தம் பக்தருக்கு உரிய பொருளை தம் ஆலயத்தில் பிரதானமாக்கியிருக்கிறார்கள்.
மகாவிஷ்ணுவின் தாரக மந்திரமான "நாராயணா" என்ற சொல்லில் இரண்டாவது எழுத்தையும் சிவபெருமானது தாரக மந்திரமான "நமசிவாய" வில் உள்ள இரண்டாம் எழுத்தான "ம" வையும் சேர்த்ததுதான் "ராம" நாமம்.
சிறந்த வழிபாடு எது?
ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் எந்த வழிபாடு முறை சிறந்தது என்று கேட்டார். அவர் "விஷ்ணோர் ஆராதனம் பரம்", "மிகச் சிறந்த வழிபாடு விஷ்ணுவை வழிபடுவதே" என்றார்.
எத்தனையோ தேவதைகள் இருக்கிறார்கள் ஆனால் அவர் விஷ்ணு பூஜை சிறந்தது என்று பரிந்துரைத்தார். விஷ்ணுவின் பக்தரை வழிபடுவதும் சிறந்தது.
விஷ்ணுவின் சேவகர்களை அல்லது விஷ்ணுவோடு சம்பந்தபட்டவர்களை வணங்குவது... உதாரணமாக துளசி செடியை வணங்கலாம்.
நாம் எல்லா செடியையும் பூஜிப்பதில்லை. ஆனால் துளசி கிருஷ்ணரோடு தொடர்புள்ளவராகையால் அவளை பூஜிக்கிறோம்.
அதுபோலவே கிருஷ்ணரோடு மிக நெருங்கிய தொடர்புள்ள எதுவானாலும் அதை பூஜிப்பது நல்லது. எனென்றால் கிருஷ்ணரை அது மகிழ்விக்கும். (From the book "Perfect questions and Perfect answers")
பகவத்கீதையில் உணவு.
ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்,
இனிமை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்.
கசப்பு, புளிப்பு, உவர்ப்பாம் இவற்றொடு
சூடுகாரம் உறைப்புகளும்
எரிச்சல் துன்பம் நோய்தரும் பாங்குள
உணவே ராஜஸர் நாடுவதாம்.
காலம் கடந்தும் சுவையிலா உணவும்
நாற்றம் வீசும் பழையனவும்
எச்சில் உணவும் அசுத்த உணவும்
தமோ குணத்தார் வேண்டுவதாம்.
November 19, 2009
பகவத் கீதை - ஸ்லோகங்கள்
1. எனக்காய் செயல் புரிவோனும்
பக்தியோடு என்னைப் பணிவோனும்
உலகில் பற்றோ வெறுப்போ இன்றி
வாழும் அன்பன் எனை அடைவான்.
- அத் (11,55)
2. எல்லா உயிரிலும் சமமாயுள்ளேன்
நண்பன் வைரி எனக்கில்லை
எனினும் என்னை அன்பால் அடைவோர்
என்னுள் அவர். அவரில் யான்.
- அத் (9,29)
3. ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்
சந்தங்களில் யான் காயத்ரி
மாதங்களில் மார்கழி யானே
ருதுக்களிலே யான் வசந்தம்தான்.
- அத்(10,35)
4. யாருள் உயிர்கள் நிலை பெற்றிடுமோ
யாரால் யாவும் நிறைவுறுமோ
பரம்பொருளாகிய அப் பரமாத்மா
அனன்ய பக்திக்கு அகப்படுவான்.
-அத்(8,22)
5. நீரில் சுவையும் வானில் ஒலியும்
மதியில் ரவியில் ஒளியும் யான்-
வேதம் அனைத்திலும் ஒங்காரம் யான்
மாந்தரில் ஆண்மை யானேதான்.
-அத்(7,8)
6. நேயர், நண்பர், பகைவர், இதரர்
நடுவர், வெறுப்போர், பந்துக்கள்
ஸாத்விகர், பாவியர் என்பாரிடமும்
சமமதி உடையோன் மேலோனாம்.
-அத்(6,9)
7. தன்னைவென்று மனத் தெளிவுற்றோன்
குளிர் வெப்பச் சுக துக்கத்தில்
புகழொடு வசையில் சமநிலையுற்றோன்
பரமாத் மாவின் அருளுற்றான்.
-அத்(6,7)
8. தவத்தொடு யாகம் துய்ப்போன் யானே
உலகுக் கெல்லாம் ஈசுவரனே
எல்லா உயிர்க்கும் தோழன் நானே
என அறிவோனே சாந்தியுளான்.
-அத்(5,29)
9. தீமை இல்லாச் சொல்லொடு ஸத்தியம்
இனிமை நலனும் பயக்கும் சொல்
வேதம் ஓதல் நாம ஜபங்கள்
யாவும் வாக்குத் தவமாகும்.
-அத்(17,15)
10. வானவர் அந்தணர் குருக்கள் ஞானியர்
யாவரிடத்திலும் பணிவன்பு,
தூய்மை, நேர்மை, புலன்மேல் ஆட்சி
அஹிம்சை யாவும் உடல் தவமாகும்.
-அத்(17,14)
நாராயணீயம் - சில வரிகள்
குருவாயூரப்பா! கருணைக்கடலான கிருஷ்ணா! உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்கு வேண்டியதை பொழியும் கற்பகத்தளிர் போன்றதுமாகிய உமது பாத மூலம் எப்பொழுதும் எனது சித்தத்தில் இருந்து கொண்டு எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரமானந்த மோக்ஷ்ச் செல்வத்தையளிக்கட்டும்.(தசகம் 100.10)
நாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை.. |
---|