November 19, 2011

பக்தியின் 9 வகைகள்
1. ஸ்ரவணம் (கேட்டல்)
2. கீர்த்தனை (வேண்டுதல்)
3. ஸ்மரணம் (நினைவில் வைத்துக் கொள்ளல்)
4. பாத சேவனம் (பாதங்களைத் தஞ்சமடைதல்)
5. அர்ச்சனை (பூஜை)
6. நமஸ்காரம் (வணங்குதல்)
7. தாஸ்பா (சேவை)
8. சக்யத்வா (நட்பு)
9. ஆத்ம நிவேதனம் (தன்னையே இறைவனுக்கு சமர்ப்பித்தல்)

October 19, 2011

கஜேந்த்ர மோட்சம் - ஸ்ரீமந்நாராயணீயம்1. ஒரு சமயம் இந்த்ரத்யும்னன் என்ற பாண்டிய நாட்டரசன் உம்மிடம் பக்தியுள்ளவன், சந்தன மலையில் உமது பூஜையில் ஆழ்ந்த மனமுடையவனாக இருக்கையில் அகஸ்தியர் அதிதி உபசாரத்தை நாடி வந்தபொழுது அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.

(அவன் மெளன விரதம் பூண்டிருந்தான். மகான்களை உபசரிப்பதற்காக மெளனம் போன்ற நியமங்களையும் விடலாம். அற்ப விஷயத்திற்காக விரதங்களை விடக்கூடாது.)

2. கும்ப ஸம்பவரான அகஸ்திய முனிவர் மிகுந்த கோபமடைந்து கர்வத்தால் "நீ மரியாதை செய்யாமலிருந்ததால் யானையாக பிறப்பாயாக" என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். அம்மன்னன் உம்முடைய ஸ்மரணையுடன் கூடிய யானையரசராகிய செல்வப்பிறவியை அடைந்தான்.

3. பாற்கடலின் நடுவிலிருக்கும் திரிகூடமலையில் பெண்யானைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த யானையரசு சக்தியில் எல்லாப்பிராணிகளையும் மீறியிருந்தது. உமது பக்தர்களுக்கு எங்குதான் மேன்மை கிடைப்பதில்லை..

4. அந்த யானையரசு தனது இயற்கை பலத்தாலும் திவ்ய தேச சக்தியாலும் துன்பங்களையறியாததாயினும் ஒருசமயம் மலைப்பிராந்தியத்தில் வெயிலின் கடுமையில் ஒரு ஏரியில் யானைக்கூட்டங்களுடன் புகுந்து உம்மால் தூண்டப்பட்டு விளையாடிற்று.

5. அப்பொழுது ஹுஹு என்ற கந்தர்வன் தேவலருடைய சாபத்தால் முதலையாகி அந்த ஏரி ஜலத்தில் இருந்தது. இந்த யானையைக் காலில் பிடித்துக்கொண்டது. உமது பக்தர்களுக்கு சந்தியளிக்கும்பொருட்டுச் சிரமத்தை கொடுப்பவராகவும் நீர் இருக்கிறீர்.

6. உம்மை ஆராதித்த பெறுமையால் பிறறால் ஜெயிக்கப்படாமல் ஆயிரம் வருஷம் போர் புரிந்துகொண்டிருந்த அந்த யானையரசுக்கு காலம் வந்தபொழுது உமது திருவடியில் ஏகாக்ர பக்தி ஸித்திப்பதற்க்காக முதலையால் பீடிக்கப்பட்டதாகச் செய்தீரல்லவா?

7. பரமத்மாவாக எங்கும் உறைபவரே! அந்த கஜேந்த்ரன் துன்பத்தின்மேலீட்டால் பூர்வ ஜென்ம ஜானமும் பக்தியும் விளங்கப்பெற்றுத் துதிக்கையால் உயரத்தூக்கிப் பிடித்த தாமரப்பூக்களால் அர்ச்சித்துக்கொண்டு முந்தைய பிறவியில் அப்பியாசிக்கப்பட்ட நிக்குண பிரம்மத்தைப் போற்றும் சிறந்ததொரு ஸ்தோத்திரத்தை மீண்டும் பாடிற்று.

8. நிர்க்குண பிரம்மமாகவும் அனைத்துமாகவும் இருக்கும் பரம்மொருளைப்பற்றிய அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு பிரம்மா, சிவன் முதலியவர்கள் அது நான் அல்ல என்று வராமலிருக்கையில் ஸர்வாத்மாவாகிய நீர் அளவற்ற கருணையின் வேகத்தால் கருடன் மேலேறிக்கொண்டுவந்து காட்சியளித்தீரல்லவா?

9. அந்த கஜெந்த்ரனை நீர் உமது தாமரைக்கையால் பிடித்துக் கொண்டு சக்ராயுதத்தால் அந்த பெரிய முதலையைப் பிளந்தீர். அப்பொழுது அந்த முதலையும் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வனாகிவிடவே அந்த யானையும் உமது ஸாரூப்ய முக்தியடைந்து பிரகாசித்தது.

10. "இந்த கதையையும் உன்னையும் என்னையும் எவன் விடியற்காலையில் பாடுகிறானோ அவன் மிக உயர்ந்த நன்மையை அடைபவனாவான்." என்று கூறிவிட்டு அவனையும் கூட்டிக்கொண்டு வைகுண்டத்திற்கு சென்றுவிட்டீரல்லவா? எங்கும் நிறைந்தவரே! குருவாயூரப்பா, என்னைக் காத்தருளும்.


நாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை..

October 18, 2011

பஞ்சரத்ன கீர்த்தனைப் பாடல்ஸ்ரீ தியகராஜ சுவாமிகளின் "ஜகதாநந்தகாரக ஜயஜானகீப்ராணநாயக.." என தொடங்கும் பாடலின் பொருள்.

ஹே ராமச்சந்திரனே!
நீ இந்த உலகிற்கு நன்மையைச் செய்கிறாய்.
மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறாய்.
தேவர்களாலும் வணங்கப்படும் ராஜாதிராஜனாக விளங்குகிறாய்.
பகைவர்களை அழிப்பவனாகவும், பாபமற்றவனாகவும், பரிபூரணமானவனாகவும், வடிவழகனாகவும் விளங்கும் உன்னைததவிர வேறு யாரால் இவ்வுலகத்தை காப்பாற்ற முடியும்?

எப்பொழுதும் நல்லதையே கூறும் கோவிந்தனே!
லஷ்மியின் நாயகனே! வேத புருஷனே!
மூன்று உலகங்களையும் காப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதான் படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனைத் தோற்றுவித்துள்ளாய்.
சூரியனையும் சந்திரனையும் கண்களாகப் பெற்று, அக்கண்களின்மூலம் உலகத்தையே விளங்க வைக்கிறாய்.

ஆதிசேஷனின் மீது துயில்பவனே!
எப்பொழுதும் ஆஞ்சநேயரால் பணிவிடைகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஹே பிரபுவே!
சீதையின் பதியே! எத்தனை மனிதர்களுக்கு நீ அருள் புரிந்துள்ளாயோ?
பிரம்மனுக்கு வரமளித்தாய். அகல்யையின் சாபத்தை போக்கினாய்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களைச் செய்கிறாய்.
வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறாய்.

ஹே கோதண்டபாணியே!
இந்திரனால் பூஜிக்கப்படும் அழிவற்ற பரம்பொருளே!
உன்னுடைய திவ்வியமான சரித்திரம் ராமாயண மகாகாவியமாக இவ்வுலகத்தில் பிரச்சாரமாகிக் கொண்டிருக்கிறது.
கரன், விராதன், ராவணன் போன்ற கெட்ட அரக்கர்களை அழித்தவனே, ஓங்கார ஸ்வரூபனே!
உன்னுடைய நண்பனான பரமேஷ்வரனும் உன்னை பூஜிக்கிறான்.
தியாகராஜனின் நண்பனே! நீ வேதங்களின் சாரமாக விளங்குகிறாய்.
உன்னுடைய கல்யாண குணங்கள் கணக்கற்றவை.
உன்னுடைய புக்ழ் வரம்பற்றது.

எல்லா வகையான பாவங்களையும் போக்கும் உன்னை இந்த தியாகராஜன் பூஜை செய்கிறான்.
உன்னையன்றி வேறு யாரால் இந்த உலகிற்கு ஆனந்தத்தை அளிக்கவியலும்?