March 30, 2010

பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்

பகவத் கீதையில் எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.

ஒருவர் எவ்விதமான உணவை உட்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று 17 வது அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்
இன்மை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்"
- கீதை(17,8)

மேலும் கசப்பு, புளிப்பு, காரம் மிகுதியாக சேர்க்கப்பட்ட உணவு ராஜச குணத்தை தரக்கூடியதாகும் என்று அத்(17,9) ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மிகையாக உண்பவரும், உணவே இல்லாமல் இருப்பவரும், தூக்கமும், விழிப்பும் மிகுதியாக உள்ளவர்களும் யோகம் தனை எய்தார் என்று அத்(6,16) வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"அளவாய் உண்டு உடலைப் பேணி
கர்மம் சீராய்ச் செய்திடுவோன்
தூக்கம் விழிப்பு மிதமாய் உள்ளோன்
செய்யும் கர்மம் துயர் நீக்கும்".
-அத்(6,17)


இதனால்.,
மிதமான விழிப்பு, மிதமான தூக்கம்,
மிதமான உரைப்பு, புளிப்பு, கசப்பு சேர்ந்த உணவு
இவையே மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தந்திடும் என்று நாம் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்..

March 29, 2010

பக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.

துருவன் ஐந்து வயது பாலகனாய் இருந்தபோது தனது சிற்றன்னையால் அவமதிக்கப்படுகிறான். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தை தன் தாயிடம் சொல்கிறான். அவனது தாயார் மனிதர்களுக்கு அவரவர் கர்மத்தின் பலனைக் கடப்பதற்கு கிருஷ்ணருடைய திருவடிகளை சரணடைய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

தாயாரின் அறிவுரையைக் கேட்டபின் வனத்திற்கு சென்று தவம் செய்ய நினைக்கிறான். வழியில் நாரதர் அவனைக் கண்டு மந்திர மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
மந்திரம் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய".

துருவன் இறைவனிடம் மனதை அர்ப்பணம் செய்து ஐந்து மாதம் கடுமையான தவம் செய்கிறான். அவனுடைய தவத்தின் வலிமையைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவனிடம் கருணை கொண்டு ஞானானந்த ஸ்வரூபத்தில் லயித்திருந்த துருவனின் முன்னிலையில் கருடாரூரராகக் காட்சியளித்தார். அவனுடைய கன்னப் பிரதேசத்தில் சங்கத்தால்(பாஞ்ச சன்னியம்) அன்புடனும் , ஆதரவுடனும் தொட்டருளினார்.

ஞானோதயத்தால் மாசற்று விளங்கிய துருவனிடம் "நீண்ட காலம் அரசாட்சியை அனுபவித்து அனைத்திற்கும் மேலானதும், திரும்பிவருதலில்லாததுமான துருவபதத்தை அடைவாயாக" என்று ஆசி கூறினார்.


துருவனின் தந்தை ஆட்சிக்கு பிறகு வனம் செல்ல, இறைவனின் ஆசிகளின்படி துருவன் நீண்ட காலம் நல்லாட்சி செய்தான்.

March 25, 2010

பங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.


ராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. மற்றொன்று ஸ்ரீராமர், சீதையின் தெய்வீகத் திருமணம் நடைபெற்றது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்..

அதே புனித நன்னாளில்தான் ,ஸ்ரீராம பிரானின் சகோதரர்களாகிய லக்ஷ்மணர், பரதன், சத்ருக்கனருக்கும் சீதாதேவியாரின் ககோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்றது..

ஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணம் நடைபெற்ற நன்னாளில் ஸ்ரீராமரை வணங்கி அவரது திருவருளைப் பெறுவோம்.

March 23, 2010

ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.


ராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..

தங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா? என்பதுதான் சீதையின் சந்தேகம்..

ஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..

ராமர் "தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை" என்றார். மேலும் "உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்" என்று உவகையுடன் கூறினார்.

- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).

March 7, 2010

பஞ்சாயுதங்கள்


பஞ்சாயுதங்கள் :
விஷ்ணு பகவானின் கைகளில் உள்ள ஐந்து ஆயுதங்களும் பஞ்சாயுதங்கள் எனப்படும்.

1. சக்கரம் (சுதர்சனம்)
2. சங்கு (பாஞ்ச சன்னியம்)
3. வில் (ஸார்க்கம்)
4. வாள் (கட்கம்)
5. கதை

March 6, 2010

"ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள்

ஸ்லோகம்:
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா :!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாத் பவேத்!!

பொருள்:
எல்லோரும் சுகமாக வாழ்வார்களாக !
எல்லோரும் நோய் நொடியில்லாமல் வாழ்வார்களாக !
எல்லோருக்கும் மங்களம் உண்டாவதாக !
ஒருவரும் துன்புராது இன்புற்று இருப்பார்களாக !

March 5, 2010

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்


நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !

பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.