December 21, 2009

கீத கோவிந்தம் - ஜெய தேவர்



ஜெய தேவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரம பக்தர்.
ஜெய தேவர் கீத கோவிந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

ராதை ஊஞ்சலில் ஆடி கொண்டிருக்கிறாள். கண்ணன் எதிரே வருவதை அவள் கவனிக்கவில்லை. ஊஞ்சலில் தன்னை மறந்த நிலையில் கால்களை நீட்டி அமர்ந்து வீசி ஆடுகையில் எதிரே வந்த கிருஷ்ணரின் சிரசின் மீது அவள் பாதங்கள் படுகின்றன. அந்த ஸ்பரிஸத்தால் பகவான் பூரித்து போகிறார்.

இந்த கருத்துபட 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்ற வரிகளை எழுதுகிறார். எழுதிய வரிகளை படித்து பார்க்கும்பொழுது " எத்தனை பெரிய தவறு.. ராதையின் பாதங்கள் பகவான் சிரஸில் படுவதாக எழுதியது. எத்தனை அறிவீனம்" என்று எண்ணி ஏடுகளை கிழித்துவிட்டு ஸ்னானம் செய்ய செல்கிறார்.

அவர் வெளியே சென்றதும் பகவான் கிருஷ்ணரே ஜெயதேவர் வடிவில் வந்து புதிய ஏட்டை எடுத்து 'தவ பத கமல - மம ஸிரஸி மண்டல' என்று அதே வரிகளை எழுதிவிட்டு செல்கிறார். பிரேமையின் வடிவமான ராதையின் பாதங்களின் பெருமை கண்ணனுக்கல்லவா தெரியும்.

வீட்டிற்கு வந்த ஜெயதேவர் ஏட்டை பார்த்து அதிசயிக்கிறார். பகவான் கிருஷ்ணனே வந்து கீத கோவிந்த வரிகளை எழுதிவிட்டு சென்றதை அறிந்து அந்த கருணைக்கடலை மேலும் பல வரிகளால் பாடி மகிழ்கிறார்.

எல்லையே இல்லாத தூய பக்திக்கு எத்தனை மதிப்பு தருகிறான் இறைவன். தன்னை தாழ்த்திக்கொன்டு தன் அடியவர்களின் பெருமையை உயர்த்தும் அவன் பெருமையை என்னென்பது. - (டி.எஸ். நாராயண ஸ்வாமி உரையிலிருந்து)

December 17, 2009

சாரதியின் திருவழகு

திரு அரங்கனுக்கு - நடை அழகு
திரு வரதனுக்கு - குடை அழகு
திரு அழகருக்கு(கள்ளழகர்) - படை அழகு
திரு மன்னருக்கு(வில்லிபுத்தூர்) - தொடை(மாலை) அழகு
திரு அமுதனுக்கு (திருக்குடந்தை) - கிடை (பள்ளி) அழகு
திரு நாராயணர்க்கு (திரு நாராயணபுரம்) - முடி (வைர முடி) அழகு
திரு மலையில் - வடிவு அழகு
திரு சாரதிக்கு (திருவல்லிகேணி) - உடை அழகு

December 13, 2009

அனுமான் ஜெயந்தி



சிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆஞ்சநேயருக்கு வாயு புத்திரன், மகா பவிஷ்டன், அர்ஜுனசகன் என்று பல பெயர்கள் உண்டு.

அனுமான் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபடவேண்டும்.