November 5, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்


என்னுடைய blog visitors மற்றும் followers அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

October 29, 2010

காயத்ரீ ராமாயணம்


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்துநான்காயிரம் சுலோகங்கள் கொண்டதாகும். இருபத்துநான்கெழுத்துகளைக் கொண்ட காயத்ரீ மஹா மந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து ராமாயணத்தை வால்மீகி பகவான் இயற்றியிருக்கிறார்.

அவ்விதம் அமைந்த 24 சுலோகங்களே காயத்ரீ ராமாயணம் எனப்படும். இதை தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தை பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பலனும் உண்டாகும்.ஓம் நமோ பகவதே ஜானகீவல்லபாய நம.!

(ஸ்ரீ உ.வே.C.R. ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட ஸூந்தர காண்டம் புத்தகத்திலிருந்து..)

April 9, 2010

பக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.


ஸ்ரீ மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி பிராமணர் பாரதபுழை என்ற நதியின் வடகரையில் திருநாவா என்ற ஷேத்திரத்திற்கு சமீபத்தில் பிறந்தார். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகா பண்டிதர். பட்டத்திரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார்.

ஒருசமயம் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்தியபோழுது பட்டதிரி அவருக்கு சேவை புரிந்தார். அவருடைய நோயையும் யோகபலத்தால் தானே ஏற்றுக்கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார்.

குருவாயூரில்போய் தவம்புரிய நிச்சயித்து தன்னை அங்கு எடுத்து போகச் செய்து நாள்தோறும் பத்து சுலோகம் பாடலானார்.நூறு நாட்களில் பாடிமுடித்தபொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய திருவருளால் நோயிலிருந்து விடுபட்டார்.
(நாராயண பட்டதிரி எழுதிய "ஸ்ரீமந் நாராயணீயம்" ஸ்ரீமத் பாகவதத்தை 1036 சுலோகங்களில் சுருக்கி வருணிக்கிறது)

April 4, 2010

வறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.

(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)
பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.

அன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.

"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை" என்று அந்த பெண் மறுக்க, "இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.

அடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் "பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்" என்று வேண்டினாள்.

ஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.

கூடியிருந்த மக்கள் "ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே" என்று வியந்தனர்.ஜெய், பாண்டுரங்க விட்டல் பிரபு கீ ஜெய்!


ராம கிருஷ்ண மிஷனின் "கதை மலர்" புத்தகத்திலிருந்து.

March 30, 2010

பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்

பகவத் கீதையில் எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.

ஒருவர் எவ்விதமான உணவை உட்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று 17 வது அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்
இன்மை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்"
- கீதை(17,8)

மேலும் கசப்பு, புளிப்பு, காரம் மிகுதியாக சேர்க்கப்பட்ட உணவு ராஜச குணத்தை தரக்கூடியதாகும் என்று அத்(17,9) ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மிகையாக உண்பவரும், உணவே இல்லாமல் இருப்பவரும், தூக்கமும், விழிப்பும் மிகுதியாக உள்ளவர்களும் யோகம் தனை எய்தார் என்று அத்(6,16) வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"அளவாய் உண்டு உடலைப் பேணி
கர்மம் சீராய்ச் செய்திடுவோன்
தூக்கம் விழிப்பு மிதமாய் உள்ளோன்
செய்யும் கர்மம் துயர் நீக்கும்".
-அத்(6,17)


இதனால்.,
மிதமான விழிப்பு, மிதமான தூக்கம்,
மிதமான உரைப்பு, புளிப்பு, கசப்பு சேர்ந்த உணவு
இவையே மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தந்திடும் என்று நாம் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்..

March 29, 2010

பக்தனுக்கு காட்சி கொடுத்த இறைவன்.

துருவன் ஐந்து வயது பாலகனாய் இருந்தபோது தனது சிற்றன்னையால் அவமதிக்கப்படுகிறான். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தை தன் தாயிடம் சொல்கிறான். அவனது தாயார் மனிதர்களுக்கு அவரவர் கர்மத்தின் பலனைக் கடப்பதற்கு கிருஷ்ணருடைய திருவடிகளை சரணடைய வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

தாயாரின் அறிவுரையைக் கேட்டபின் வனத்திற்கு சென்று தவம் செய்ய நினைக்கிறான். வழியில் நாரதர் அவனைக் கண்டு மந்திர மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
மந்திரம் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய".

துருவன் இறைவனிடம் மனதை அர்ப்பணம் செய்து ஐந்து மாதம் கடுமையான தவம் செய்கிறான். அவனுடைய தவத்தின் வலிமையைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவனிடம் கருணை கொண்டு ஞானானந்த ஸ்வரூபத்தில் லயித்திருந்த துருவனின் முன்னிலையில் கருடாரூரராகக் காட்சியளித்தார். அவனுடைய கன்னப் பிரதேசத்தில் சங்கத்தால்(பாஞ்ச சன்னியம்) அன்புடனும் , ஆதரவுடனும் தொட்டருளினார்.

ஞானோதயத்தால் மாசற்று விளங்கிய துருவனிடம் "நீண்ட காலம் அரசாட்சியை அனுபவித்து அனைத்திற்கும் மேலானதும், திரும்பிவருதலில்லாததுமான துருவபதத்தை அடைவாயாக" என்று ஆசி கூறினார்.


துருவனின் தந்தை ஆட்சிக்கு பிறகு வனம் செல்ல, இறைவனின் ஆசிகளின்படி துருவன் நீண்ட காலம் நல்லாட்சி செய்தான்.

March 25, 2010

பங்குனி உத்திரத் திருநாளில் ஓர் தெய்வீகத் திருமணம்.


ராமாயணத்தில் பங்குனி மாதம் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, ஸ்ரீராமர் அவதரித்தது பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்.. மற்றொன்று ஸ்ரீராமர், சீதையின் தெய்வீகத் திருமணம் நடைபெற்றது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்..

அதே புனித நன்னாளில்தான் ,ஸ்ரீராம பிரானின் சகோதரர்களாகிய லக்ஷ்மணர், பரதன், சத்ருக்கனருக்கும் சீதாதேவியாரின் ககோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்றது..

ஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணம் நடைபெற்ற நன்னாளில் ஸ்ரீராமரை வணங்கி அவரது திருவருளைப் பெறுவோம்.

March 23, 2010

ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.


ராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..

தங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா? என்பதுதான் சீதையின் சந்தேகம்..

ஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..

ராமர் "தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை" என்றார். மேலும் "உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்" என்று உவகையுடன் கூறினார்.

- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).

March 7, 2010

பஞ்சாயுதங்கள்


பஞ்சாயுதங்கள் :
விஷ்ணு பகவானின் கைகளில் உள்ள ஐந்து ஆயுதங்களும் பஞ்சாயுதங்கள் எனப்படும்.

1. சக்கரம் (சுதர்சனம்)
2. சங்கு (பாஞ்ச சன்னியம்)
3. வில் (ஸார்க்கம்)
4. வாள் (கட்கம்)
5. கதை

March 6, 2010

"ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள்

ஸ்லோகம்:
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா :!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாத் பவேத்!!

பொருள்:
எல்லோரும் சுகமாக வாழ்வார்களாக !
எல்லோரும் நோய் நொடியில்லாமல் வாழ்வார்களாக !
எல்லோருக்கும் மங்களம் உண்டாவதாக !
ஒருவரும் துன்புராது இன்புற்று இருப்பார்களாக !

March 5, 2010

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்


நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !

பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.

February 25, 2010

தசாவதார பிரார்த்தனை

தசாவதார பிரார்த்தனை
-----------------------------


1. வேதங்களை கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்த வலிமை மிக்க சோமகாசுரனை வதம் செய்வதற்காக மச்சாவதாரம் எடுத்து உலக உயிர்களை காத்தவனே..! துளசி மாலை அணிந்தவனே..!
உன் திருவடிகளுக்கு வணக்கம்.!

2. அலைகளையுடைய திருப்பாற்கடலை அமிர்தம் வேண்டி கடைந்த போது தேவர்களின் உயிர் காப்பதற்காக மந்திர மலையைத் தாங்கும் ஆமை வடிவம் எடுத்தவனே..!
உன் பாதங்களுக்கு வணக்கம்..!

3. பரந்த பூமியை பாயாகச் சுருட்டி பாதாளத்தில் மறைத்து வைத்த இரண்யாட்சனை வதம்; செய்வதற்காக கொம்புடையவராக அவதாரம் எடுத்து உலகை மீட்டவனே..!
திருமகள் வீற்றிருக்கும் திருமார்பை உடையவனே..!
உன் கமல பாதங்களுக்கு வணக்கம்..!

4. மலை போன்ற பெரிய மார்புடைய இரண்யனைக் கொன்று பக்தன் பிரகலாதனைக் காக்க தூணைப்பிளந்து கொண்டு வெளிவந்த நரசிம்ம மூர்த்தியே..!
உன் பொற்பாதங்களுக்கு வணக்கம்..!

5. காஷ்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக பிறந்து ஆணவம் கொண்டிருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் மண் கேட்டு சென்று உலகை ஈரடியால் அளந்து மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்து ஆட்கொண்ட வாமனனே..!
உன் செந்தாமரை பாதங்களுக்கு வணக்கம்..!

6. தவ வலிமை மிக்க ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து மறையோர்களை மதிக்கத் தவறிய அசுரர்களை முழவதுமாக அழித்து, வேதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பரசுராமனே..!
ஐவகை ஆயுதங்களை ஏந்தியவரே..!
உன் வெண்பஞ்சு பாதங்களுக்கு வணக்கம்..!

7. அயோத்தி மன்னர் தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் மகனாகப் பிறந்து, விஸ்வாமித்ர முனிவருடன் சென்று யாகத்தைக் காத்து அகலிகைக்கு சாப விமோவனம் தந்து, ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்து ஒழுக்கம் பேணிய உத்தம ராமபிரானே..!
நின் செங்கமலப் பாதங்களுக்கு வணக்கம்..!

8. வசுதேவருடைய மனைவியாகிய தேவகியின் வயிற்றில் மூன்று மாதங்களும் பிறகு அவரது இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் ஏழு மாதங்களும் தங்கியிருந்து பிறந்தவராகிய பலராமனே..!
உயிர்களை காக்கும் சிறப்புடையவனே..!
பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்ட மனத்தை உடையவனே..!
தூயவனே..! உன் தங்கத் திருவடிகளுக்கு வணக்கம்..!

9. வட மதுரை நகரில் வசுதேவர் தேவகி புத்திரனாய் பிறந்து, யமுனைக் கரையில் யசோதையிடம் வளர்ந்து, தயிரும் வெண்ணெயும் திருடி உண்டு, காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடி, கோபியருடன் கொஞ்சி மகிழ்ந்து இபாண்டவர்களுக்காக போராடி தர்மத்தை காத்த தனிப்பெருஞ் செல்வமான கிருஷ்ணா!
உன் ஒளி பொருந்திய திருவடிகளுக்கு வணக்கம்..!

10. தேவர்கள் துதிக்க ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் குதிரையில் வரும் கல்கி அவதாரமே!

உனக்காக கொண்டு வந்த இந்த மலரை என் தும்பிக்கையின் சூடு பட்டு வாடுவதற்குள் வாங்கிச்செல் ஆதிமூலமே என்று கதறிய யானை வடிவிலான கஜேந்திர ஆழ்வாருக்கு உடனே வந்து அருள் செய்தவனே!
அன்பர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுத்தருளும் லட்சுமி நாராயணனே..!
உன் திருவடிகளுக்கு வணக்கம்..!

February 17, 2010

ராதாஷ்டமி


ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவதை போல ஸ்ரீராதா ராணியின் அவதார நாள் ராதாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் பல வகையான மலர்கள் ராதாராணியின் அலங்காரத்தில் இடம்பெறுகிறது. மற்றும் ராதாகிருஷ்ணர் கோவில்களில் பஜனைகளும் சமய சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றது.

January 18, 2010

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

ஸ்ரீ கிருஷ்ண கவசம் - சில வரிகள்

உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்லை
கண்ணனில் லாமல் காலமு மில்லை

எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்
சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவ கண்ணன் தனிமுகம் மறவேன்

உன்னை நம்பி உன்னையே சேர்ந்தால்
பிறவிக ளிலைநீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடன் சேர்த்து உன் வடிவாக்கு...
......
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய கிருஷ்ணா..

- கண்ணதாசன்

January 16, 2010

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை - சில வரிகள்..

மந்திரமும் தந்திரமும்
கொண்டதொரு தெய்வம்
சிந்தனையில் வந்துதவும்
தேனமுதச் செல்வம்
அந்தியிலும் சந்தியிலும்
காவல் தரும் முகமே
இந்திரனும் போற்றுவது
என்ஹரியின் பதமே..
- kannadasan

January 7, 2010

ஆண்டாளின் கிளி

ஆண்டாளின் கரத்தில் அமர்ந்துள்ள கிளி 'சுகப்பிரம்மர்' ஆவார். ரங்க நாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில் தூது அனுப்பினாளாம் ஆண்டாள். தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றாராம். அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.