March 23, 2010

ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.


ராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..

தங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா? என்பதுதான் சீதையின் சந்தேகம்..

ஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..

ராமர் "தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை" என்றார். மேலும் "உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்" என்று உவகையுடன் கூறினார்.

- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).

8 comments:

ramesh sadasivam said...

நானும் அந்தக் கதையை அந்த புத்தகத்தில் படித்திருக்கிறேன். To cut a long story short - என்பது போல ரத்தின சுருக்கமாக அழகு குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி.

Thilaga. S said...

ராமர் கதைகள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் ராம பக்தர் நீங்கள்.

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

sury siva said...

நம்ம உலகத்துலே சட்டம், நியாயம், தர்மம் என்று பல நிலைகள் இருக்கு.
நியாயமானது என்று இருப்பதெல்லாம் சட்டம் சொல்லாது. ( உதாரணமாக,
க்டன் கொடுத்தவன் ப்ராமிஸரி நோட் 3 வருடம் ஆயிடுத்துன்னா காலாவதி
ஆயிடும். க்டன் வாங்கினவன் சட்டபூர்வமா கடனைத் திருப்பித் தர சட்டத்தில்
இடமில்லை.) ஆனா நியாயம் கடனைத் திருப்பித் தரணும் இல்லையா ?

சட்டம், நியாயம் சொல்வதை தர்மம் சொல்லாது.
தர்மம் எடுத்துரைப்பதை சட்டம், நியாயத்திற்குக் கீழ் கொண்டு வர முடியாது.

பசி என்று ஒருவன் வீட்டு வாசலில் நிற்கும்பொழுது அவனுக்கு அன்னம் இடாமல்
தான் சாப்பிடுவது தர்மம் ஆகாது. ஆனால், சட்ட பூர்வமாக இது எடுபடுமா ?
எடுபடாது. மேலும், தனக்கே உணவு இல்லை, தனக்கும் தன் மனைவி, குழந்தைகளுக்குமே போதிய உணவு இல்லை. உனக்கு எப்படி தர முடியும் என்று ஒரு இல்லறத்தான் (க்ரஹஸ்தன்) சொல்வது நியாய ரீதியாகவும் சரியே. ஆனால், தர்மம்
ஆகாது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை .
எனும் வள்ளுவம் தர்மத்தைப் பற்றிப் பேசுகிறது.

இந்த தர்மம் அவரவர் தொழிலுக்கேற்று மாறுபடும். அரசன் ப்ரோ ஆக்டிவ் ஆக செயல்படவேண்டும். உதாரணமாக, இன்றைய காலத்தில், வருமுன் காப்போம் என்று சமூகத்திற்கு இன்னல் வரும் என்று தீர்மானித்து சிலரை அரசு குண்டர் சட்டத்தில் அடைப்பதும் தர்மம் தான். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும்போது ஒரு சிலர் அவர் குற்றம் புரியுமுன்னரே அழிக்கப்படும் நிலையும் உண்டு. இருந்தாலும் சட்டம், நியாயம், தர்மம் எல்லா ரீதிப்படியும் இது சரியே. இருப்பினும் அவர்களது ஜட்ஜ்மென்ட் சரியாக இருத்தல் வேண்டும்.
தண்டனை குற்றத்திற்கு ஏற்றதாக இருப்பின் அது சரியே. அதற்கு மீறிப்போனால் தான் சங்கடங்கள் அதுவும் தார்மீக சங்கடங்களே வருகின்றன.

இலக்குமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது சரியா ? குற்றத்திற்கு ஏற்ற தண்டனைதானா ? சட்ட ரீதியாகவோ, நியாயமாகவோ, தர்மமாகவோ இது சரிதானா
என்று சீதை கேட்கவில்லை. ( கேட்டதாக எனக்குத் தெரியவில்லை. )


ஸ்ரீ ராம நவமி அன்று இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா என்றும் தெரியவில்லை.
பெரியவர்கள் பதிவு சொல்லவேண்டும்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

ramesh sadasivam said...

லக்ஷ்மணர் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது ஷத்ரிய தர்மத்துக்கு உட்பட்டுத் தான். ராமர் லக்ஷ்மணர் இருவருமே தங்கள் விருப்பமின்மையை பலமுறை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல் இருந்தது மட்டுமல்லாமல் அன்னையையும் தாக்க முற்பட்டதாலேயே லக்ஷ்மணர் தண்டிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்பொழுதும் பெண்களை கொல்லாமல் அங்க ஹீனம் செய்தால் போதும் என்கிற நியதிக்கு உட்பட்டே செயல்பட்டார்.

// சட்ட ரீதியாகவோ, நியாயமாகவோ, தர்மமாகவோ இது சரிதானா
என்று சீதை கேட்கவில்லை. ( கேட்டதாக எனக்குத் தெரியவில்லை. ) //

ராம-லக்ஷ்மண-சீதை மூவருக்குள்ளும் நடந்த எல்லா சம்பாஷணைகளும் பதிவு செய்யப் படவில்லை. பதிவு செய்யப் படாததாலேயே அப்படி சம்பாஷ்ணைகள் நடை பெறவில்லை என்று பொருள் அல்ல.

இந்த பதிவில் அன்னை கேட்ட கேள்வியும் ராமர் தந்த பதிலும் அவர்களுக்குள் நடந்த பல உரையாடல்களில் ஒரு உரையாடல். அவ்வளவே. நாம் அதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும்.

ramesh sadasivam said...

ராம-லக்ஷ்மண-சீதை மூவரும் பதின்மூன்றாண்டுகள் ஒன்றாக இருந்தார்கள். அப்பொழுது எவ்வளவோ பேசியிருப்பார்கள். அத்தனையும் பதிவு செய்வது சாத்தியமில்லை. பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர்கள் எதுவுமே பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள் என்று நினைக்க முடியுமோ சூரி தாத்தா? :)

Thilaga. S said...

புனிதமான சீதாதேவியாருடைய இருப்பிடத்தில் வந்து கலகம் செய்ததால்தான் லக்ஷ்மணர் அப்படி நடந்துகொள்ள வேண்டியதாயிற்று என்று நினைக்கிறேன்.

இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

sury siva said...

// ராம-லக்ஷ்மண-சீதை மூவரும் பதின்மூன்றாண்டுகள் ஒன்றாக இருந்தார்கள். அப்பொழுது எவ்வளவோ பேசியிருப்பார்கள். அத்தனையும் பதிவு செய்வது சாத்தியமில்லை. பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர்கள் எதுவுமே பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள் என்று நினைக்க முடியுமோ //

இந்த் பதிவு பற்றி எனது நண்பர் வால்மீகி ராமாயணத்தை நன்கு படித்தவர் அவரிடம் கேட்டேன். அவர் சொல்கிறார்:
ராமன் சீதைக்கு சமாதானம் சொல்கையில் இது ராஜ தர்மம் அரக்கர்களை கொல்வது என்றவுடன் சீதை கேட்கிறாள்:
நீங்கள் தான் ராஜ்யத்தை துறந்து காட்டில் வாழ்கிறீர்களே ? உங்களுக்கு ஏது ராஜ்யம்? நீங்கள் எப்படி தங்களை இப்பொழுது ராஜா என்று சொல்லிக்கொள்ளமுடியும்?

அதுவும், குற்றம் நடக்கும் இடத்திற்கு ராஜா நீங்கள் இல்லையே ? அந்த இடத்தின் ராஜாவின் பொறுப்பல்லவா இது?

இது போன்ற பல சந்தேகங்களைக் கேட்கும் சீதைக்கு லாஜிகலாக சமாதானம் சொல்ல இராமனால் முடியவில்லை போலும்.!! அவர் கடைசியாக, மஹாவிஷ்ணு வின் அவதாரமாக வந்து அரக்கர்களை வதம் செய்ய நான் ப்ரதிக்ஞை செய்திருக்கிறேன் என்று சொல்கிறாராம்.

உபரி தகவல்: சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த பிரபல அறிஞர் ரைட் ஹானரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்களது நூலில் ராமனை கடவுளாக அல்லாது ஒரு மானிடனாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ( வால்மீகி ராமாயணத்திலிருந்து) தொகுத்து விவாதம் செய்யப்பட்டிருக்கிறது. வால்மீகி ராமாயணத்தை ஒரு க்ரிடிக் ஆக
அணுகுபவர்க்கு ஒரு சிறந்த நூல்.

சுப்பு ரத்தினம்.

Thilaga. S said...

பலர் அறியாத தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
நன்றி சுப்பு தாத்தா.