ஸ்ரீ தியகராஜ சுவாமிகளின் "ஜகதாநந்தகாரக ஜயஜானகீப்ராணநாயக.." என தொடங்கும் பாடலின் பொருள்.
ஹே ராமச்சந்திரனே!
நீ இந்த உலகிற்கு நன்மையைச் செய்கிறாய்.
மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறாய்.
தேவர்களாலும் வணங்கப்படும் ராஜாதிராஜனாக விளங்குகிறாய்.
பகைவர்களை அழிப்பவனாகவும், பாபமற்றவனாகவும், பரிபூரணமானவனாகவும், வடிவழகனாகவும் விளங்கும் உன்னைததவிர வேறு யாரால் இவ்வுலகத்தை காப்பாற்ற முடியும்?
எப்பொழுதும் நல்லதையே கூறும் கோவிந்தனே!
லஷ்மியின் நாயகனே! வேத புருஷனே!
மூன்று உலகங்களையும் காப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதான் படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனைத் தோற்றுவித்துள்ளாய்.
சூரியனையும் சந்திரனையும் கண்களாகப் பெற்று, அக்கண்களின்மூலம் உலகத்தையே விளங்க வைக்கிறாய்.
ஆதிசேஷனின் மீது துயில்பவனே!
எப்பொழுதும் ஆஞ்சநேயரால் பணிவிடைகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஹே பிரபுவே!
சீதையின் பதியே! எத்தனை மனிதர்களுக்கு நீ அருள் புரிந்துள்ளாயோ?
பிரம்மனுக்கு வரமளித்தாய். அகல்யையின் சாபத்தை போக்கினாய்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களைச் செய்கிறாய்.
வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறாய்.
ஹே கோதண்டபாணியே!
இந்திரனால் பூஜிக்கப்படும் அழிவற்ற பரம்பொருளே!
உன்னுடைய திவ்வியமான சரித்திரம் ராமாயண மகாகாவியமாக இவ்வுலகத்தில் பிரச்சாரமாகிக் கொண்டிருக்கிறது.
கரன், விராதன், ராவணன் போன்ற கெட்ட அரக்கர்களை அழித்தவனே, ஓங்கார ஸ்வரூபனே!
உன்னுடைய நண்பனான பரமேஷ்வரனும் உன்னை பூஜிக்கிறான்.
தியாகராஜனின் நண்பனே! நீ வேதங்களின் சாரமாக விளங்குகிறாய்.
உன்னுடைய கல்யாண குணங்கள் கணக்கற்றவை.
உன்னுடைய புக்ழ் வரம்பற்றது.
எல்லா வகையான பாவங்களையும் போக்கும் உன்னை இந்த தியாகராஜன் பூஜை செய்கிறான்.
உன்னையன்றி வேறு யாரால் இந்த உலகிற்கு ஆனந்தத்தை அளிக்கவியலும்?
No comments:
Post a Comment