1. ஒரு சமயம் இந்த்ரத்யும்னன் என்ற பாண்டிய நாட்டரசன் உம்மிடம் பக்தியுள்ளவன், சந்தன மலையில் உமது பூஜையில் ஆழ்ந்த மனமுடையவனாக இருக்கையில் அகஸ்தியர் அதிதி உபசாரத்தை நாடி வந்தபொழுது அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.
(அவன் மெளன விரதம் பூண்டிருந்தான். மகான்களை உபசரிப்பதற்காக மெளனம் போன்ற நியமங்களையும் விடலாம். அற்ப விஷயத்திற்காக விரதங்களை விடக்கூடாது.)
2. கும்ப ஸம்பவரான அகஸ்திய முனிவர் மிகுந்த கோபமடைந்து கர்வத்தால் "நீ மரியாதை செய்யாமலிருந்ததால் யானையாக பிறப்பாயாக" என்று சபித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். அம்மன்னன் உம்முடைய ஸ்மரணையுடன் கூடிய யானையரசராகிய செல்வப்பிறவியை அடைந்தான்.
3. பாற்கடலின் நடுவிலிருக்கும் திரிகூடமலையில் பெண்யானைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த யானையரசு சக்தியில் எல்லாப்பிராணிகளையும் மீறியிருந்தது. உமது பக்தர்களுக்கு எங்குதான் மேன்மை கிடைப்பதில்லை..
4. அந்த யானையரசு தனது இயற்கை பலத்தாலும் திவ்ய தேச சக்தியாலும் துன்பங்களையறியாததாயினும் ஒருசமயம் மலைப்பிராந்தியத்தில் வெயிலின் கடுமையில் ஒரு ஏரியில் யானைக்கூட்டங்களுடன் புகுந்து உம்மால் தூண்டப்பட்டு விளையாடிற்று.
5. அப்பொழுது ஹுஹு என்ற கந்தர்வன் தேவலருடைய சாபத்தால் முதலையாகி அந்த ஏரி ஜலத்தில் இருந்தது. இந்த யானையைக் காலில் பிடித்துக்கொண்டது. உமது பக்தர்களுக்கு சந்தியளிக்கும்பொருட்டுச் சிரமத்தை கொடுப்பவராகவும் நீர் இருக்கிறீர்.
6. உம்மை ஆராதித்த பெறுமையால் பிறறால் ஜெயிக்கப்படாமல் ஆயிரம் வருஷம் போர் புரிந்துகொண்டிருந்த அந்த யானையரசுக்கு காலம் வந்தபொழுது உமது திருவடியில் ஏகாக்ர பக்தி ஸித்திப்பதற்க்காக முதலையால் பீடிக்கப்பட்டதாகச் செய்தீரல்லவா?
7. பரமத்மாவாக எங்கும் உறைபவரே! அந்த கஜேந்த்ரன் துன்பத்தின்மேலீட்டால் பூர்வ ஜென்ம ஜானமும் பக்தியும் விளங்கப்பெற்றுத் துதிக்கையால் உயரத்தூக்கிப் பிடித்த தாமரப்பூக்களால் அர்ச்சித்துக்கொண்டு முந்தைய பிறவியில் அப்பியாசிக்கப்பட்ட நிக்குண பிரம்மத்தைப் போற்றும் சிறந்ததொரு ஸ்தோத்திரத்தை மீண்டும் பாடிற்று.
8. நிர்க்குண பிரம்மமாகவும் அனைத்துமாகவும் இருக்கும் பரம்மொருளைப்பற்றிய அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு பிரம்மா, சிவன் முதலியவர்கள் அது நான் அல்ல என்று வராமலிருக்கையில் ஸர்வாத்மாவாகிய நீர் அளவற்ற கருணையின் வேகத்தால் கருடன் மேலேறிக்கொண்டுவந்து காட்சியளித்தீரல்லவா?
9. அந்த கஜெந்த்ரனை நீர் உமது தாமரைக்கையால் பிடித்துக் கொண்டு சக்ராயுதத்தால் அந்த பெரிய முதலையைப் பிளந்தீர். அப்பொழுது அந்த முதலையும் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வனாகிவிடவே அந்த யானையும் உமது ஸாரூப்ய முக்தியடைந்து பிரகாசித்தது.
10. "இந்த கதையையும் உன்னையும் என்னையும் எவன் விடியற்காலையில் பாடுகிறானோ அவன் மிக உயர்ந்த நன்மையை அடைபவனாவான்." என்று கூறிவிட்டு அவனையும் கூட்டிக்கொண்டு வைகுண்டத்திற்கு சென்றுவிட்டீரல்லவா? எங்கும் நிறைந்தவரே! குருவாயூரப்பா, என்னைக் காத்தருளும்.
நாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை.. |
---|